அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
“தற்போது அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டுள்ள ஒருசில தரப்பினர், சுரேஷ் சலேவின் கைது விவகாரத்தைத் தங்களது சுயநல அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளனர்.
அவர்கள் சலேவுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுக்கும் விசித்திரமான செயற்பாடுகள், சலே மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ‘நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-
“நாட்டின் போதைப்பொருள் அரக்கனை ஒழிப்பதற்காக எமது அரசு மிகவும் கடுமையான மற்றும் தீர்க்கமான உத்திகளைக் கையாண்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா வசித்து வந்த கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லம், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் விசேட உயர் மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க வசித்த உத்தியோகபூர்வ இல்லமானது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுச் செயற்பாடுகளுக்காகப் முழுமையாகப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் முக்கிய போதைப்பொருள் மற்றும் ஊழல் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இத்தகைய அரச உத்தியோகபூர்வ இல்லங்களினுள்ளேயே விசேட நீதிமன்றக் கட்டமைப்புகளை அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ” – என்றார்.
