கங்காரு தேசத்தை மிரட்டும் பறவைக் காய்ச்சல்

 

மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் பதிவான பறவைக் காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையான Quindalup பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Giant Petrel என்ற கடல் பறவையிடம் ஆபத்தான H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை ‘CSIRO’ ஆய்வகம் இதனை உறுதிப்படுத்தியது.

ஜூன் 20 முதல் ஆஸ்திரேலியாவில் 4 பறவைகளுக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ்பெரன்ஸ் (Esperance) பகுதிக்கு கிழக்கே உள்ள கேப் லே கிராண்ட் (Cape Le Grand) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரு புலம்பெயர் கடல் பறவைகளுக்கே முதலில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.

வைரஸ் அச்சம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொதுமக்கள் தரப்பில் இருந்து அவசர விலங்கு நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு (Emergency Animal Disease hotline) 400-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதில் 53 புகார்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 17 பறவைகளின் சோதனை முடிவுகள் ‘நெகட்டிவ்’ (பாதிப்பில்லை) என வந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் தலைமை கால்நடை அதிகாரி டாக்டர் பெத் குக்சன் இது குறித்துக் கூறுகையில்:

“தற்போதைக்கு, தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு எப்போதாவது வரும் புலம்பெயர் கடல் பறவைகளிடம் மட்டுமே இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பறவைகள் பெருமளவில் இறக்கவோ அல்லது இந்த நோய் கோழிகள் மற்றும் உள்நாட்டு விவசாய உற்பத்தி அமைப்புகளுக்குப் பரவவோ இல்லை. இதனால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது.”

ஆஸ்திரேலியாவின் அண்டார்டிக் எல்லைக்குட்பட்ட ஹேர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகளில் (Heard and McDonald Islands) சமீபத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் வெடிப்போடு இந்த வைரஸிற்குத் தொடர்பிருப்பது மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தீவுகளில் பரவிய வைரஸ் காரணமாக அண்மையில் சுமார் 13,000 கடல் யானை குட்டிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் இந்த ஆபத்தான பறவைக் காய்ச்சல் பாதிப்பு கடைசியாகப் பதிவான கண்டம் ஆஸ்திரேலியா ஆகும்.

Related Articles

Latest Articles