அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி முதியவர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென நீரில் மூழ்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் உடனடியாக அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், பிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நீண்ட நேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதன் பின்னரே முதியவரின் சடலம் நீரிலிருந்து மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார், சடலத்தை மீட்டு சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர் மேற்கொண்டுள்ளார்.
இந்த முதியவரின் திடீர் மரணம் வளத்தாப்பிட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
