அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு கொள்கையானது மிகவும் பலவீனமான ஒன்றாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” இன்று நாளாந்தம் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்து, மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளதுடன் 32 மரணங்களும் பதிவாகியுள்ளன.
14 நிர்வாக மாவட்டங்களிலுள்ள 538 கிராம சேவகர் பிரிவுகளில் இப்பிரச்சினை பாரியளவில் காணப்படுகின்றன.
இது தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் (PHO Association எச்சரித்துள்ளதுடன், ‘பிரெட்டோ சுட்டெண்’ (Breteau Index) அபாயகரமான நிலையை எட்டியுள்ளன.
இது குறித்து அரசியல் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாத காரணத்தினாலேயே டெங்கு அரக்கன் தலைதூக்கியுள்ளது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரத் துறையினர் மீது விரல் நீட்டுவதை விடுத்து, அதிகளவிலான டெங்கு பரவலைக் கொண்ட மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தும் வேலையை முன்னெடுத்திருக்க வேண்டும்.
தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த கடுவலை மேயர், இன்று கடுவலை நகரை மிகவும் அசுத்தமான பகுதியாகவும், டெங்கு குகையாகவும் மாற்றியுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் கூடச் செயற்பட முடியாமல் முடங்கியுள்ளன. மாகாண சபைகள் இயங்கி இருந்திருந்தால் டெங்கு அரக்கனை இதைவிட வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்க முடியும்.
இந்த அரசாங்கம் திட்டமிட்டே மாகாண சபைகளையும் பிற்போட்டுள்ளது. இந்த திறமையற்ற, மந்தகதியான, வெறும் பேச்சுகளை மட்டுமே கொண்ட ஒரு அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் காணப்படுகின்றது.
இவர்கள் சர்வாதிகாரத்தை விதைத்து தனிக் கட்சி ஆட்சியை நடத்தவே முயற்சிக்கிறார்கள். இதனால் எப்போதும் ஒடுக்குமுறையைக் கையாண்டு வருவதால், இந்த அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
