சிறார்களிடையே வேகமாக பரவும் டெங்கு: சுகாதார பிரிவு எச்சரிக்கை

சிறுவர்களிடையே டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள், இந்த நோயிலிருந்து குணமடைந்த பின்னரும் சில குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அரிதான சில சந்தர்ப்பங்களில், டெங்கு நோய் மூளையைப் பாதிக்கக்கூடிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும், அதே நேரத்தில் கடுமையான தசை மற்றும் எலும்பு வலி மற்றும் இதயத்தைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல விசேட நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு வழமையாக நோய் குணமடையும் காலமான ஏழு முதல் எட்டு நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால், அதேசமயம் பசியின்மை சீராவது அல்லது சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுவது போன்ற அறிகுறிகள் எதுவும் தென்படாவிட்டால், அது ‘ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்’ (HLH – Hemophagocytic Lymphohistiocytosis) எனப்படும் நோய் எதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய ஒரு அரிய பாதிப்பைக் குறிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நுளம்பு பெருகும் இடங்களை தொடர்ந்து அழிக்குமாறும், குறிப்பாக மாலை 5 முதல் 7 மணி வரையிலான காலப்பகுதியில் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் ஜன்னல்களை மூடி வைக்குமாறும், நுளம்பு கடியை தவிர்ப்பதற்காக குழந்தைகளுக்கு நீண்ட கை-காற்சட்டைகளை அணிவிக்குமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

காய்ச்சல், கண்களுக்குப் பின்னால் வலி, தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும் என்று அவர் விளக்கினார். இருப்பினும், டெங்கு தொற்றுக்குப் பிறகு நரம்பியல் சிக்கல்கள், தசை அழற்சி, இதயம் சார்ந்த சிக்கல்கள், நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகளுடன் தொடர்புடைய நீண்டகால காய்ச்சல் உள்ளிட்ட சில அசாதாரண சிக்கல்களை மருத்துவர்கள் சமீபகாலமாக அவதானித்துள்ளனர்.

டெங்குவிலிருந்து குணமடைந்த பிறகும் தொடர்ந்து அதிக காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு CPK (Creatine Phosphokinase) பரிசோதனை உள்ளிட்ட மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படலாம் என்றும் டொக்டர் பெரேரா குறிப்பிட்டுள்ளார். குணமடையும் காலத்தில் போதுமான ஓய்வு மற்றும் தாராளமாக திரவ உணவுகளை உட்கொள்வது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரு குழந்தையின் பிளேட்லெட் (Platelet) எண்ணிக்கை சுமார் 150,000 க்குக் கீழே குறைந்தால், மேலதிக பரிசோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்புக்காக நாங்கள் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சல் (Dengue haemorrhagic fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி (Dengue shock syndrome) ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறைந்தது 48 மணிநேரம் அல்லது அவர்களின் நிலையைப் பொறுத்து அதற்கு மேல் கண்காணிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

டெங்கு என்பது இன்னும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நோயாகவே இருப்பதால், தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு டொக்டர் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஒரு நாளில் மட்டும் 1,200 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் 57,668 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

இன்றைய தினமும் பல பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது அரசு நிறுவனங்களில் நுளம்பு பெருகும் இடங்கள் உள்ளதா என்பது குறித்து சோதனைகளும் நடத்தப்பட்டன.

Related Articles

Latest Articles