பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

பதுளை – செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், இப்பகுதியில் வீதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஓராண்டு காலமாக இப்பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்து (Single-lane traffic) மாத்திரமே அனுமதிக்கப்பட்டு வந்ததுடன், வாகன சாரதிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இப்பகுதியானது நிலச்சரிவு மற்றும் பாறைச்
சரிவு அபாயமிக்க ஒரு வலயாகவே காணப்படுகிறது. இதற்கு முன்னரும் இதே போன்றதொரு ஆபத்தான சூழலில், சுமார் இரண்டு தடவைகள் கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்திருந்தன. எனினும், அவை அப்புறப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டும் இதே 13ஆம் கட்டைப் பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து வீதியின் ஓரத்தில் வீழ்ந்து காணப்பட்டது. அவ்வாறு பாறை சரிந்திருந்த ஒரு ஆபத்தான சந்தர்ப்பத்திலேயே, பயணிகள் பேருந்து (Bus) ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து மிகக் கொடூரமான விபத்துக்குள்ளானது.

நாடு முழுவதையும் உலுக்கிய இந்தச் சோகமான விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

தகவல்: த.டிமேஷன்

Related Articles

Latest Articles