‘மலையக மகிழ்ச்சி’திட்டம் – வெலிமடையில் புதிய வீட்டுத் திட்டம் ஆரம்பம்

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் “மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெலிமடைபோவ தோட்டத்தில் நடைபெற்றது.

நீண்டகாலமாக மண்சரிவு அபாயம் காரணமாக அவதிக்குள்ளாகியிருந்த மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் கௌரவமான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், பதுளை மாவட்டத்தின் வெலிமடை பிரதேசத்திற்குட்பட்ட போவ தோட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள 19 குடும்பங்களுக்கு 19 பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடுகள் கட்டப்படவுள்ளன.

இதன்கீழ் ஒரு வீட்டு அலகிற்காக அரசாங்கத்தினால் 28 இலட்சம் ரூபாயும், மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 04 இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம மற்றும் வெலிமடை பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளி மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles