IMF பொறிக்குள் சிக்கி பஞ்சம் பாடும் அரசு: மலையக மக்களுக்கு தீர்வு எங்கே?

“டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் தொடர்பான தகவல்கள் உரிய வகையில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பில் மீள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பலர் ஆவணங்களையும் இழந்துள்ளனர்.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டேவின் சுரேன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“டித்வா பேரிடர் ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடந்துள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கப்பெறவில்லை. வெறும் உறுதிமொழிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஒரு தகடு பாதிக்கப்பட்டிருந்தாலும் 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை விடுத்தனர். ஆனால் நிவாரண திட்டம் ஆமை வேகத்திலேயே இடம்பெற்றுவருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இந்த அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் பஞ்சம் பாடிக்கொண்டிருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட பெருந்தோட்டப் பகுதி வீடுகள் தொடர்பில் மாறுபட்ட புள்ளி விபரங்கள் வெளிவருகின்றன. உண்மையான தகவல்கள் மூடிமறைக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் தொடர்பான தகவல்கள் திருப்தியாக இல்லை. எனவே, மீள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பலர் ஆவணங்களையும் இழந்துள்ளனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles