நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.
படுகாயம் அடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய குழுவொன்றுக்கும், போதைப்பொருளுக்கு எதிரான குழுவுக்கும் இடையில்தான் மோதல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இம்மோதலால் சிறைச்சாலைக்குள் பெரும் பதற்றம் நிலவியது.
நீர்க்கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இருந்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்தில் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உறவினர்கள் அமைதி அடைந்தனர்.
பெண் கைதிகள் பலர் சிறைச்சாலை கூரைமீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
