முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கொள்முதல் நடைமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவின் தகவல்களின்படி அவர் மீதான முதன்மை குற்றச்சாட்டுகள் வருமாறு:
முதலாவது குற்றச்சாட்டு (2014): மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களைப் பிரச்சாரம் செய்வதற்காக 250,000 சுவரொட்டிகளை (Posters) அச்சிடுமாறு சந்தேகநபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகள் ‘வெலவன்ன ட்ரேடிங்’ மற்றும் ‘குருநாகல் ட்ரேடிங்’ ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம், அந்த நிறுவனங்களுக்கு 2.665 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டு (2015): 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், வெள்ள நிவாரணத்திற்காக எனக் கூறி முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல், அதே நிறுவனங்களிடமிருந்து 5,000 டி-சர்ட்டுகளையும் (T-shirts) 5,000 சேலைகளையும் அவர் பெற்றுள்ளார்.
ஆனால், அந்தப் பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை எனவும், இதன் மூலம் முறையே 3.275 மில்லியன் ரூபாய் மற்றும் 3.075 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது குற்றச்சாட்டு (2013 மற்றும் 2014): 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மே தினப் பேரணிகளில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்குவதற்காக, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து குறித்த இரு நிறுவனங்களிடமிருந்தும் டி-சர்ட்டுகள் மற்றும் சேலைகளைப் பெற்று விநியோகித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.










