பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டி (World Cup Quarter-final) என்பது வெறும் சாதாரணமான ஒரு போட்டியல்ல. பல மொராக்கோ ரசிகர்களுக்கு இது தங்களது முந்தைய கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு ஆட்டமாகும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடு என்ற மொராக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பிரான்ஸ் தான்.
ஜுலை 10 பாஸ்டனில் (Boston) இந்த இரு அணிகளும் மீண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆனால் இந்த முறை மொராக்கோ வெறும் கனவுகளுடன் களம் இறங்கவில்லை; தங்களாலும் வெல்ல முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் வருகிறார்கள்.
“இது மொராக்கோ தேசிய அணிக்கு ஒரு பழிவாங்கும் ஆட்டம்” என்கிறார் மொராக்கோ விளையாட்டு ஊடகவியலாளர் ஹம்ஸா ஷ்டேவி (Hamza Shteiwy).
குறிப்பாக 2022 அணியில் இருந்த வீரர்களுக்கு அந்தத் தோல்வி பெரும் வலியைக் கொடுத்தது. இப்போது அவர்கள் தங்களுக்காகவும், நாட்டுக்காகவும் அந்தக் கணக்கைத் தீர்க்கக் காத்திருக்கிறார்கள்.
‘கத்தாரில் நடந்தது தற்செயலானது அல்ல’
2022 இல் மொராக்கோ அரையிறுதியை எட்டியது ஒரு பெரிய அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, அவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவது என்பது ரசிகர்களின் சாதாரண எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
2022 இல் நாங்கள் கனவு காண்பவர்களாக இருந்தோம் என்கிறார் ஷ்டேவி. “இப்போது மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகம். அரையிறுதிக்குக் குறைவாக எதை அடைந்தாலும் அது சாதனையாகக் கருதப்படாது.
இந்தத் தன்னம்பிக்கை சும்மா வந்துவிடவில்லை. கத்தாரில் சாதித்த பிறகு, மொராக்கோவின் 20 வயதுக்குட்பட்டோருக்கான (Under-20) அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
மூத்தோர் அணி பிபா (Fifa) தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மொராக்கோ கால்பந்து சம்மேளனம் (RMFF) இளைஞர் மேம்பாட்டில் செய்த நீண்ட கால முதலீடுகள் இப்போது பலன் தரத் தொடங்கியுள்ளன.
இந்தத் தொடர் முழுவதும் மொராக்கோ அணி பிரேசில், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் கனடா போன்ற வலுவான அணிகளை எதிர்கொண்டு, தங்களின் அசாத்திய திறமையால் பிரான்சுடன் மோதும் நிலையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவிற்கு மொராக்கோவிலிருந்து நேரடியாகவும், உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருவதால், மைதானத்தில் மொராக்கோவிற்கே ஆதரவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தலைமையிலான பிரான்ஸ் அணி, இந்தத் தொடரின் மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முழுமையான ஒரு அணியாகக் காணப்படுகிறது.
வெற்றிக்கு உந்துசக்தியாக இருக்கும் ‘அம்மாக்களின் பாசம்’
மொராக்கோ அணியின் இந்த அசுர வளர்ச்சிக்குக் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான தத்துவமும் உள்ளது.
போட்டி நடக்கும் இடங்களுக்கு வீரர்களின் தாயார்களை அழைத்து வருவதை மொராக்கோ கால்பந்து சம்மேளனம் ஒரு உளவியல் உத்தியாகவே (psychological support strategy) பயன்படுத்துகிறது.
மைதானத்தில் வீரர்கள் தங்கள் தாயைக் கட்டியணைத்து வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இந்த முறையும் தொடர்கின்றன.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெனால்டியை அடித்த இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari) நேராக மைதானத்தின் கேலரிக்கு ஓடிச் சென்று தனது தாயைக் கட்டியணைத்து அழுதது ரசிகர்களை நெகிழ வைத்தது. “ஒரு தாயின் பிரார்த்தனைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என்கிறார்கள் அங்கிருக்கும் மூத்த ஊடகவியலாளர்கள்.
வரலாறு மற்றும் அடையாளத்திற்கான போராட்டம்
கால்பந்தையும் தாண்டி, இந்த ஆட்டத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட கால அரசியல் மற்றும் சமூக வரலாறும் உள்ளது.
பிரான்ஸ் மற்றும் மொராக்கோ இடையே காலனித்துவம், குடியேற்றம் சார்ந்த பல சிக்கலான வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன.
ஐரோப்பாவிலேயே அதிகளவிலான மொராக்கோ மக்கள் பிரான்சில் தான் வாழ்கிறார்கள். இந்த ஆட்டத்தைக் காண வரும் பல ரசிகர்கள் பிரான்சிலிருந்து வருபவர்கள் தான்.
அதுமட்டுமன்றி, மொராக்கோ அணியில் விளையாடும் பல வீரர்கள் பிரான்ஸின் இளையோர் அணிகளுக்காக விளையாடத் தகுதி பெற்றிருந்தும், தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களின் நாடான மொராக்கோவிற்காக விளையாடத் தீர்மானித்தவர்கள்.
