அரசின் இயலாமையை அம்பலப்படுத்திய சிறைச்சாலை சம்பவம்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் திறமையின்மையும் பலவீனமும் சிறைச்சாலை அதிகாரிகளின் வாயிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவரது உரையின் முக்கிய சுருக்கம் வருமாறு:

சட்ட ஒழுங்கு சீர்குலைவு

கோவிட்-19, பொருளாதார நெருக்கடி மற்றும் டெங்கு ஒழிப்பு போன்றவற்றைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கத்திற்கு சிறைச்சாலை விவகாரத்தைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவும் அழுத்தங்களுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதிலும், நீதித்துறையில் தலையிடுவதிலுமே நீதியமைச்சர் உள்ளிட்ட அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிரான பழிவாங்கல்

நாட்டில் பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள் உள்ள நிலையில், அரசாங்கம் மீண்டும் அரசியல் பழிவாங்கல்களை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு 2019 இல் கிடைத்த மருத்துவச் சிகிச்சைக்கான கருணை அடிப்படையிலான கொடுப்பனவுக்குப் போலிப் பற்றுச்சீட்டுகளை வழங்கியதாகக் கூறி, அவரைப் பழிவாங்கவும் கைது செய்யவும் அரசாங்கம் திட்டமிடுகிறது. இதற்கெதிராக நாம் முன்னிற்போம்.

ஜே.வி.பிக்கு சவால்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, ஜே.வி.பியுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியல்வாதியும் போதைப்பொருள் கடத்தலோ அல்லது பயன்பாட்டிலோ ஈடுபடவில்லை என்பதை முடியுமானால் நிரூபித்துக் காட்டுமாறு பெலவத்தைக்கு (ஜே.வி.பி தலைமையகம்) சவால் விடுக்கிறேன்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு நீதி

தனிநபர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தாக்குதல்களை விடுத்து, நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டுள்ள 46,000 சிறுமிகளுக்கு நீதியை நிலைநாட்ட முன்வருமாறு கௌசல்யா ஆரியரத்னவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை மோதல்களின் போது, தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கூறிய விடையங்களை, இப்போது அவரிடம் அதிகாரம் உள்ளதால் நடைமுறைப்படுத்திக் காட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சவால் விடுத்தார்.

Related Articles

Latest Articles