நீர்கொழும்பு சிறைச்சாலையில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதனுடன் தொடர்புபட்ட கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றச்செயலை ‘சுரேஷ்’ மற்றும் ‘பூருமூனா’ உள்ளிட்ட 13 முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் முன்னின்று வழிநடத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அங்குள்ள சிசிடிவி (CCTV) வீடியோ காட்சிகளும் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.
வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன.
கைதிகள் சிலரின் கைகளுக்குத் துப்பாக்கிகள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும், நீர்கொழும்பு சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பிலும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
