“தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘மாண்புமிகு டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில்’ இன்று (11) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
ஜனநாயகத் தூண்கள் ஒடுக்கப்படுகின்றன
“ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசியலமைப்பில் நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி, பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது. ‘நிகழ்நிலை காப்புச் சட்டம்’ (Online Safety Act) மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று தேர்தல் காலத்தில் கூறினாலும், அவை இன்னமும் நடைமுறையில் உள்ளன. தற்போது பாராளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றது.
விவசாயிகளுக்கு துரோகம்
இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்குக் கூட சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாகக் கூறினர். ஆனால் இன்று அது 120 ரூபாய்க்கும் குறைவான மட்டத்திற்கு வந்துள்ளது.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபாய் செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறிருக்க, விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று விவசாயிக்கு ஒரு கிலோவிற்குக் குறைந்தது 17 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையை விட அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதையே நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று பாராளுமன்றத்தில் விவசாயிகளின் துயரத்தைக் கூறுவதற்கு எதிர்க்கட்சிக்குள்ள உரிமையை மறுத்து வருகின்றது.
இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் பாதையிலேயே பயணித்து, 2023 ஆம் ஆண்டைப் போலவே இன்றும் பாராளுமன்றக் குழுக்களில் பேசுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் தடை விதித்துள்ளது.
விதை, உரம், விவசாய இரசாயனப் பிரச்சினைகள் மற்றும் மனித-யானை மோதல் போன்ற விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு இன்று உரிமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோடீஸ்வரர்களுக்கே சலுகைகள்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 52% பங்களிப்பை வழங்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான ‘பராட்டே சட்டத்தை’, தேர்தல் இலக்குகளுக்காக மட்டுமே இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கமும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தன.
இதனால் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இந்த தொழில்முனைவோருக்குக் குறைந்த வட்டியில் மூலதனத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. அரசாங்கத்தின் சலுகைகள் அனைத்தும் பெரும் கோடீஸ்வரர்களுக்கே கிடைக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்கும், கிராமப்புற மக்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த சலுகைகள் கிடைத்தபாடில்லை.
சர்வாதிகாரத்தை நோக்கிய ஆட்சி
இந்த அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது. இவர்கள் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சுதந்திர ஊடகம் மட்டுமன்றி சிவில் சமூகத்தையும் முடக்கி, ஒரு சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும்.
தற்போது உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பெரும் அழுத்தமாகும். இதற்கு எதிராக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும்.
எங்களிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், நாட்டை கட்டியெழுப்பும் சரியான பாதையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி பயணித்துக்கொண்டிருக்கின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
