சிஐடி போல் நடித்து மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை! சிக்கிய ஆசாமிகள்!

பொலிஸ் மற்றும் சிஐடி அதிகாரிகள் போல் நடித்து, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பகுதிகளில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்த 40, 44 மற்றும் 45 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் ஹெராயின் மற்றும் போதை மாத்திரைகளுக்குக் கடுமையாக அடிமையானவர்கள் என்பதும், தாங்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை போதைப்பொருள் பாவனைக்காகவே முழுமையாகச் செலவிட்டுள்ளனர் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வீதிகளில் தனித்துச் செல்லும் நபர்களையோ அல்லது வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பவர்களையோ குறிவைக்கும் இக்கும்பல், தங்களை பொலிஸ் அல்லது சிஐடி அதிகாரிகள் என முதலில் அடையாளப்படுத்துகின்றனர்.

பின்னர் அவர்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சோதனையிடுவது போல நடித்து, அவர்களிடம் இருக்கும் தங்கம் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவர்களின் துணிகரச் செயலுக்கு மற்றுமொரு உதாரணம் கேகாலையில் நடந்துள்ளது. அங்கு சிலரைச் சோதனையிட்ட இக்கும்பல், தங்களது உயர் அதிகாரி இவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரச் சொன்னதாக நாடகமாடியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைக் கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே அழைத்து வந்து, பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுமட்டுமன்றி, சில வீடுகளில் சோதனையிட வந்ததாகக் கூறி, அங்கிருந்தவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டும் கொள்ளையடித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பேராதனை, கண்டி, கொழும்பு கொம்பனித்தெரு, கிராண்ட்பாஸ், மாவனெல்லை, நாரம்மல, பிலிமத்தலாவை, தவுலகல, கம்பளை, கலஹா, கேகாலை மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இக்குற்றச் செயல்களை இவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர்.

கம்பளையில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், பேராதனை நகரில் சுற்றித் திரிந்த இக்கும்பலின் முதன்மைச் சந்தேக நபர் முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையை அடுத்து, மற்ற இரு சந்தேக நபர்களும் பிலிமத்தலாவை நகரில் வைத்து போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கத்தி, போதை மாத்திரைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி கண்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இவர்கள் விற்றுள்ள நிலையில், கண்டியில் விற்கப்பட்ட கணிசமான தங்கமும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்த போலி பொலிஸ் கும்பலிடம், நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க,யோகா

Related Articles

Latest Articles