அநுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை மோட்டார் சைக்கிளும், மாணவர்களை ஏற்றச்சென்ற பஸ்சும் நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த கர்ப்பிணிப் பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்குள்ளானவர்களில், உயிரிழந்த ஆண்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவையிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் செல்வதற்காக வந்திருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் மற்றொரு நண்பருடன் இணைந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பாக ‘சிசு செரிய’ பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










