மத்திய கிழக்கில் திடீரென ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு விமானங்கள் நடுவானில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருந்துவிட்டுப் பின்னர் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன.
நேற்று மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட UL229 விமானமும், சவூதி அரேபியாவின் தம்மாம் நோக்கிப் புறப்பட்ட UL253 விமானமும் மேற்காசிய வான்பரப்பை நெருங்கியபோது இக்கட்டான சூழலை எதிர்கொண்டன.
ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காகக் குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடின.
இதனால் ஏர்பஸ் ஏ321நியோ (Airbus A321neo) ரகத்தைச் சேர்ந்த இந்த இரு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களும் உடனடியாகத் தங்களின் இலக்குகளை அடைய முடியாமல், குறித்த வான்பரப்பிற்கு அருகில் சுமார் ஒரு மணிநேரமும் பத்து நிமிடங்களும் நடுவானில் வட்டமடித்தபடி காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தத் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாகப் பல சர்வதேச விமானங்களும் இதேபோன்றதொரு சூழலை எதிர்கொண்டன.
பின்னர் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானிகள் இரு விமானங்களையும் தத்தமது இலக்கு விமான நிலையங்களில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
அங்குப் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், அந்த இரு விமானங்களும் இன்று புதன்கிழமை காலை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவனத் தொடர்பாடல் பிரிவு முகாமையாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.










