ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இராணுவத் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் கடற்படை மற்றும் புரட்சிகர காவல் படையினரின் (Revolutionary Guards) முக்கிய தளங்கள் அமைந்துள்ள பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகிலும், கெஷ்ம் தீவிலும் (Qeshm Island) மற்றுமொரு இரவுத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
“போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட அமெரிக்கப் படைகள் துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கடலோரக் கண்காணிப்புத் தளங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள் மற்றும் கடற்படைத் தளங்கள் உள்ளிட்ட டஜன் கணக்கான ஈரானிய இராணுவ இலக்குகளைத் தாக்கின.”என்று
— அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் உட்பட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தம் போன்ற பலத்த சத்தங்கள் கேட்டதாகவும், குண்டு சிதறல்கள் (shrapnel) தாக்கியதில் ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அண்மைக்காலத் தாக்குதல்களில் ஐந்து பாலங்களும், கடலோரப் பகுதியான பண்டார் காமிர் (Bandar Khamir) ரயில் நிலையமும், தென்கிழக்கு ஈரானில் உள்ள இரான்ஷார் (Iranshahr) விமான நிலையமும் சேதமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு ஈரானின் துறைமுக நகரமான பண்டார் காமிரில் உள்ள பாலங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோதல் போக்கு காரணமாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியேயான போக்குவரத்து மீண்டும் ஸ்தம்பித்துள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விலைகளும் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா தங்களது உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடலின் நுழைவாயிலில் உள்ள மற்றொரு முக்கிய நீரிணையான ‘பாப் அல்-மண்டேப்’ (Bab al-Mandeb) பகுதியை மூடுவதற்கு யேமனில் உள்ள தங்களது ஹூதி (Houthi) கூட்டாளிகளை ஈரான் தூண்டக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளன.










