டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படும் பயணிகள் பேருந்துகளுக்கு எதிராகப் பொலிஸார் நாடு தழுவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 100 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதில் பல பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பேருந்துகள் தொடர்பான விசாரணைகள் தொடர்வதால் அவற்றுக்கு எதிராகவும் வழக்குத் தொடரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சோதனைகளின் போது பல பேருந்துகளில் இருந்து சேகரிக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளின் மூலம் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
அனுமதிக்கப்படாத இத்தகைய மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகளைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் பெருமளவான மண்ணெண்ணெய் கொள்வனவு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பயணிகள் பேருந்துகளின் பயன்பாட்டிற்காக மண்ணெண்ணெயை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.










