போலியாக உருவாக்கப்பட்ட அல்லது திருடப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி கணக்குகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகத் தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், இது தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அல்லது ஏனைய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் பொய்யாக உரிமைக்கோரி, குற்றவாளிகள் போலி WhatsApp, Telegram மற்றும் பிற சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி வருவதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பின்வரும் மோசடி முறைகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:
- மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் துறை (CID) அல்லது பிற பிரிவுகளின் அதிகாரிகள் போல் நடித்து வரும் போலி அழைப்புகள்.
- தேசிய அடையாள அட்டை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அல்லது உங்களது வங்கிச் கணக்குகள் பணமோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் கூறப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள்.
- WhatsApp / சமூக ஊடகங்கள் வழியாக போலி பொலிஸ் அடையாள அட்டைகள், ஆவணங்கள் அல்லது சின்னங்களை அனுப்பி சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டுதல்.
- சரிபார்ப்பு என்ற பெயரில் OTP, கடவுச்சொற்கள் (Passwords) அல்லது வங்கி விபரங்கள் போன்ற ரகசியத் தரவுகளைக் கோருதல்.
- தெரியாத வங்கிச் கணக்குகள் அல்லது கிரிப்டோகரன்சி (Cryptocurrency – USDT உட்பட) கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புமாறு அழுத்தம் தருதல்.
தனிப்பட்ட மற்றும் நிதி விபரங்களைப் பாதுகாப்பதற்குப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்:
– ரகசிய விபரங்களைப் பகிர வேண்டாம்: தொலைபேசி அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக தேசிய அடையாள அட்டை, வங்கி விபரங்கள், அட்டை எண்கள், CVV, PIN அல்லது OTP ஆகியவற்றை எந்தவொரு நிறுவனமும் கோராது.
– மிரட்டல்களுக்குப் பயந்து பணம் அனுப்ப வேண்டாம்: வங்கிச் கணக்குகள் முடக்கப்படும் அல்லது அட்டைகள் முடக்கப்படும் என்ற மிரட்டல்களின் அடிப்படையில் பணப் பரிமாற்றம் செய்யாதீர்கள்.
– வங்கி மூலம் சரிபார்க்கவும்: பணத்தை அனுப்புவதற்கு முன், உங்களது வங்கியின் அதிகாரப்பூர்வ தொடர்பிலக்கங்களைப் பயன்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
– பொலிஸ் மற்றும் மத்திய வங்கியின் நடைமுறைகள்: தனிப்பட்ட WhatsApp கணக்குகள் மூலமாகவோ தனிப்பட்ட வங்கி வைப்புகள் மூலமாகவோ விசாரணைகள் நடத்தப்படுவதில்லை.
– உண்மையைச் சரிபார்க்கவும்: சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் அல்லது அடையாள அட்டைகள் போலியானவையாக இருக்கலாம் — அது குறித்து உடனடியாகப் புகாரளிக்கவும்.
– சந்தேகத்திற்குரிய இணைப்புகள், பதிவிறக்கங்கள் அல்லது QR குறியீடுகளைத் தவிர்க்கவும்.
இவ்வாறான மோசடிகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகள்/செய்திகளைப் பெறுபவர்கள் உடனடியாகப் பின்வரும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு – மேற்பார்வை அதிகாரி: 071 8592918
விசாரணை அதிகாரி: 071 8591765
பிரிவு அலுவலகம்: 011 2300756
மேலும், குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) நேரில் சென்றும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.
