அதிகாரிகள்மீது ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்! ஆஸ்திரேலியாவில் சம்பவம்

தனது அமைச்சின்கீழ் செயல்படும் இரண்டு உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைக்குழு (Integrity Commission) தீவிர ஊழல் மோசடி கண்டறிந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தின் (ACT) கல்வி அமைச்சர் இவெட் பெர்ரி (Yvette Berry) தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கன்பெராவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றைப் புனரமைப்பதற்கான பல மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில், ‘கட்டுமான, வனவியல் மற்றும் கடல்சார் ஊழியர்கள் சங்கத்தின்’ (CFMEU) நலன்களுக்காக, ஏசிடி கல்விப் பணிப்பாளர் செயலகத்தின் முன்னாள் தலைவரும், அமைச்சர் பெர்ரியின் அப்போதைய தலைமை அதிகாரியும் “நேர்மையற்ற முறையில் மறைமுக உதவியை (Back door access) வழங்கியுள்ளனர்” என ஊழல் தடுப்பு ஆணைக்குழு தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பெர்ரி, ஆணைக்குழு தனது விசாரணையில் தனக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை என்ற போதிலும், தான் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் சற்று முன்னர்தான் முதலமைச்சருடன் பேசி எனது முடிவைத் தெரிவித்தேன். நான் தொடர்ந்து பின்வரிசை (Backbench) பாராளுமன்ற உறுப்பினராக அமர்ந்து, கின்னிண்டெர்ரா (Ginninderra) தொகுதி மக்களுக்குச் சேவை செய்வேன்,” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு முதல் ஏசிடி-யின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வரும் இவெட் பெர்ரி, தற்போதைய முதலமைச்சர் ஆண்ட்ரூ பாரிற்கு (Andrew Barr) பின்னர் முதலமைச்சராக வரக்கூடிய சாத்தியமான தலைவராகக் கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி மற்றும் ஆரம்பக் கல்வி அமைச்சுப் பொறுப்புகளுடன், வீட்டுவசதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூன் மாதம், கல்வி மற்றும் வீட்டுவசதி அமைச்சுப் பொறுப்புகளைக் கையாண்ட விதம் தொடர்பில் ஏசிடி சட்டசபையில் (ACT Legislative Assembly) அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles