850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை

ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹட்டன் பிளான்டேசன் நிறுவனமும் இலங்கை புற்றுநோய் சங்கமும் இணைந்து இந்த விசேட வைத்திய முகாமை ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தன. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இம் முகாமில் கலந்து கொண்ட 850 பேரில், சுமார் 400 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொண்ட போது, மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளுடன் 8 பேரும், வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேரும் அடையாளம் காணப்பட்டதாக ஹட்டன் பிளான்டேசன் மனிதவள முகாமையாளர் டிலான் பத்மசிறி தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட அனைவரும் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், வைத்திய முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களின் வசதிக்காக இலவச போக்குவரத்து, தேநீர் மற்றும் உணவு வசதிகளும் ஹட்டன் பிளான்டேசன் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த வைத்திய முகாம், தோட்டத் தொழிலாளர்களிடையே புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, துரிதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் முக்கியமான சுகாதார முயற்சியாகக் கருதப்படுகிறது.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles