“நாட்டில் டெங்கு பரவல் நிலைமை சீராகி வருகின்றது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது; டெங்கு ஒழிப்புப் போரைக் கைவிட்டுவிட வேண்டாம்” என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதி வரை டெங்கு அபாயம் தொடரும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் வறட்சி மற்றும் மழையுடனான மாறும் காலநிலையால் இந்நிலைமை ஏற்படக்கூடும்.
எனவே, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். வீடுகளையும், வீட்டைச் சுற்றியுள்ள சூழலையும் டெங்கு கொசுக்கள் பரவாத வகையில் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை, டெங்கு தடுப்பூசிக்கான அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிற டெங்கு ஒழிப்புத் திட்டங்களும் செப்டம்பர் மாதம் முதல் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே, டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.










