“மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால், பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ என்ற புதிய பிரேரணையை புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராக உள்ளது”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, மலையகத் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவல் வெளியிட்ட மனோ கணேசன்,
மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் எடுத்துக் கூறினோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இன்றைய அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறைமையை ஒழித்து விடுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுமா என்ற இந்திய அரசின் நியாயமான சந்தேகத்தை நாங்கள் தீர்த்து வைத்தோம்.
நல்லாட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தை ஆரம்பித்த பொழுது, அது நிறைவேறாவிட்டாலும் கூட ஒரு இடைக்கால அறிக்கை வரை நாங்கள் வந்திருந்தோம்.
தாம் ஜனாதிபதியானால் அந்த இடைக்கால அறிக்கையில் எட்டப்பட்ட நிலைப்பாடுகளில் இருந்து, புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் போவதாகவும், எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடங்கப் போவதில்லை என்றும், அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.
இந்த இடைக்கால அறிக்கை, இன்றைய அரசியலமைப்பில் இருக்கக் கூடிய 13 ஆம் திருத்தத்தை, மாகாண சபை முறைமையை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கிறது.
ஆகவே, இந்திய அரசுக்கு அத்தகையதொரு சந்தேகம் நியாயமாக இருந்தாலும் கூட, அது தற்போது அவசியமில்லை.
அனுரகுமார திசாநாயக்க தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் கூறியிருந்தோம்.
அத்துடன், 12, 13 மாவட்டங்களில் சிதறிப் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால்,
பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ என்ற புதிய பிரேரணையை புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தோம்.
அனுரகுமார திசாநாயக்க தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும், இந்தியாவுடனான உறவு சார்பாகவும் ஒரு நேர்முகமான சிந்தனை கொண்டிருந்தாலும் கூட, அவரது அரசாங்கத்திலும் அவரது கட்சியிலும் இருக்கக் கூடிய பலர் எதிர்மறை எண்ணப்பாடுகள் கொண்டிருப்பதாக நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.










