சாரதிகளே அவதானம்! நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. எனவே, சாரதிகள் அவதானமாக வாகனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலுகல, பிட்டவலை, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் அடிக்கடி காணப்படுகிறது.

அதேபோன்று நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, ரதல்ல, நானுஓயா மற்றும் நுவரெலியா நகரை அண்மித்த பகுதிகளிலும் பார்வைத் தூரம் மிகவும் குறையும் அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மலைப்பாங்கான வளைவுகள் நிறைந்த சாலைகளில் எதிரே வரும் வாகனங்களை தெளிவாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பிரதான வீதிகளை பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பனிமூட்டம் நிலவும் பகுதிகளில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை கட்டாயமாக ஒளிரச் செய்து பயணிக்க வேண்டும் என்றும், தங்களுக்குரிய போக்குவரத்து பாதையிலேயே ஒழுங்காகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற முறையில் வேகமாக வாகனம் செலுத்துவதைத் தவிர்த்து, முன்னால் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளியைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மழை காரணமாக சாலைகள் வழுக்கலாக காணப்படுவதால் திடீர் பிரேக் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மலைப்பாதைகளில் கூடுதல் கவனத்துடன் பயணிக்கவும் போக்குவரத்து பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சீரற்ற காலநிலை தொடரும் என வானிலை ஆய்வு நிலையம் முன்னறிவிப்பு விடுத்துள்ள நிலையில், மத்திய மலைநாட்டு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் பயணத்திற்கு முன் வானிலை நிலவரங்களை அறிந்து, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையுடன் இணைந்து நிலவும் இந்த கடுமையான பனிமூட்டம் காரணமாக அடுத்த சில நாட்களிலும் போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அனைத்து வாகன ஓட்டிகளும் பொறுப்புடனும் அதிகபட்ச அவதானத்துடனும் பயணிப்பது அவசியம் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles