மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவனமான SLS தரச்சான்று பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசங்களையே அணிய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, வீதிப் பாதுகாப்பு தொடர்பான ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீதிவிபத்துகளைக் குறைப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் இரண்டு வருட தேசிய வீதிப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் 96 நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 30 நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் ஆண்டுதோறும் 2,500 இற்கும் அதிகமானோர் வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இவர்களில் 1,000 இற்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு தலையில் ஏற்படும் கடுமையான காயங்களே காரணமாக உள்ளன.
2026 ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 1,626 உயிரிழப்பு ஏற்படுத்திய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. 2025 இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 1,585 ஆக இருந்தது.
2026 முதல் ஏழு மாதங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து, SLS தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களின் பயன்பாட்டை உறுதிப்படுத்த இலங்கை தரநிர்ணய நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து நாடளாவிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஹெட்மெட் தொடர்பான சட்டங்களை பொலிஸார் தொடர்ந்தும் சோதனைகள் மூலம் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளனர்.










