மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத்தால் நேற்று (07) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு உரிமையுள்ள நிவாரணம் தொடர்பான பணம் கிடைக்கவில்லை என பயனாளிகள் பிரதேச செயலாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் அந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறிப்பிட்ட கணக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அது குறித்த அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தலவாக்கலை பிரதேச செயலாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடித் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு சந்தேகநபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர் மேலும் மூன்று அதிகாரிகள் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட உள்ளனர் எனவும் விசாரணை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles