வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி தொடர்கிறது – டிசம்பர் 31 வரை நீடிப்பு!

தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் 50 சதவீத மேலதிக கட்டணத்தை 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இந்த நீடிப்பு ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

குறித்த உத்தரவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வாகனங்களுக்கு பொதுவான மற்றும் சலுகை அடிப்படையிலான சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக கட்டணம் அறவிடப்படும். பெற்றோல், டீசல், ஹைபிரிட் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் வாகனங்கள் மற்றும் மோட்டார் கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன வகைகள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், 2026 மே 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் Letter of Credit – LC திறக்கப்பட்ட வாகனங்களுக்கு பொதுவாக இந்த 50சதவீத மேலதிக கட்டணம் பொருந்தாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், மே 15ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட LC-யில் வாகனங்களின் எண்ணிக்கை, அடையாள இலக்கம், வாகன விபரம், தொழில்நுட்ப விவரங்கள் அல்லது LC காலாவதி திகதி போன்ற முக்கிய தகவல்கள் மாற்றப்பட்டிருந்தால், அந்த வாகனங்களுக்கு இந்த மேலதிக கட்டணம் விதிக்கப்படும்.

அத்துடன், Bill of Lading அல்லது Airway Bill-இல் குறிப்பிடப்படும் வாகனம் ஏற்றுமதி செய்யப்பட்ட திகதி 2026 நவம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் இருந்தாலும் 50 வீத மேலதிக கட்டணம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவு ஓகஸ்ட் 13ஆம் திகதிய 2501/88 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய நடைமுறை ஓகஸ்ட் 15 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என சுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 50 வீத மேலதிக சுங்கக் கட்டணம் உடனடியாக நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்த ஆண்டு இறுதி வரை அதனைத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles