பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் முன்வைப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, இவ்விரு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்புக்காக நீதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இந்த முன்மொழிவுகளை உடனடியாகக் கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இச்சட்டமூலங்கள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இச்சட்டமூலங்கள் தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

மாகாண மட்டத்திற்கு விரிவடையும் மேல்முறையீட்டு நீதிமன்றம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்த பின்னர், மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கமாக கொழும்பிலேயே தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி வழக்குகளை விசாரிக்கும் அதேவேளை, மாகாண மட்டத்திலும் அந்த நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளன.

எனினும், இதனைச் செய்வதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால், வரைவு செய்யப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

நான்கு புதிய நீதிபதிகளின் நியமனத்துடன், சில மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகள் ஒரு வருடம் வரை தொடரக்கூடும் என்றும், சில மாகாணங்களில் காலவரையறையின்றி அமர்வுகள் நடைபெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாகாணத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இந்த அமர்வுகளின் கால அளவு தீர்மானிக்கப்படும்.

1.1 மில்லியன் வழக்குகளின் தேக்க நிலைக்குத் தீர்வு

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதையும், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட வரைவு 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மேல் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏனைய அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க வழிவகுக்கும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டும் வரும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பல்வேறு நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளின் தேக்க நிலைக்குத் தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விரண்டு சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டால், நீதவான் நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான 400க்கும் மேற்பட்ட நீதிபதிகள் சேவை நீடிப்பைப் பெறுவார்கள்.

இந்தச் சேவை நீடிப்பு மூலம் நீதிபதிகளால் நிலுவையிலுள்ள வழக்குகளைத் திறம்பட முடித்து வைக்க முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இச்சட்டமூலங்கள் எந்தவொரு குறிப்பிட்ட தனிநபருக்கும் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்படவில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று என்றும் ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles