வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டபூர்வமாக சம்பாதித்த பணத்தை வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது மேலதிக வரிகள் விதிக்கப்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனெரிபிட்டிய, வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இலங்கைக்கு வங்கி முறையின் ஊடாக அனுப்புவதற்காக தனியான வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வருமானத்திற்கு வரி விதிக்கப்படுமா என்பது, சம்பந்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆண்டில் அந்த நபர் இலங்கையின் வரி நோக்கத்திற்கான வதிவாளராகக் கருதப்படுகிறாரா என்பதையே பொறுத்தது என அவர் குறிப்பிட்டார்.
ஒருவர் இலங்கையின் வரி வதிவாளராகக் கருதப்பட்டால், அவர் இலங்கையிலும் வெளிநாட்டிலும் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படக்கூடும்.
ஆனால் வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர், சம்பந்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆண்டில் இலங்கையின் வரி வதிவாளராகக் கருதப்படாவிட்டால், இலங்கைக்கு வெளியே அவர் சம்பாதிக்கும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படாது என அவர் தெரிவித்தார்.
எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் சட்டபூர்வமாக சம்பாதித்த வெளிநாட்டு வருமானத்தை உத்தியோகபூர்வ வங்கி வழிகளின் மூலம் இலங்கைக்கு அனுப்புவது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் ஹிரான் மெனெரிபிட்டிய வலியுறுத்தினார்.
மேலும், சட்டபூர்வமாக சம்பாதிக்கப்பட்ட வெளிநாட்டு வருமானத்தை வங்கி முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்பி, தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய பின்னர், அந்தப் பணத்தை இலங்கையில் சட்டபூர்வமான முதலீடுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, வரி தொடர்பான அச்சம் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்










