2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை

“கடன்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டு வரையே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2028 இல் இருந்து நாம் கடன்களை மீளச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

“2028 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்க வேண்டும் என கடன் வழங்கிய தரப்புகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் தற்போது 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையே கையிருப்பில் உள்ளது. 2028 ஐ அடையும் போது நாம் 15 பில்லியன் டாலர் இலக்கை நெருங்க வேண்டும் என்றால், இன்னும் பல பில்லியன் டாலர்களைத் திரட்ட வேண்டியுள்ளது.

இவ்வருட இறுதியாகும்போது இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது. அப்படியானால் எஞ்சிய தொகையை எவ்வாறு திரட்டுவது? இதுவே நாட்டின் முன் உள்ள பிரதான பிரச்சினையாகும். அத்துடன் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிணைமுறிகளையும் (Bonds) வெளியிட வேண்டும். இது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும்.

2027 மார்ச் இறுதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கை முடிவடைகின்றது. அதன்பிறகு எவ்வாறு முன்னோக்கிச் செல்வது? இதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? நாம் ஆட்சியில் இருந்தபோது அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்வைத்து சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டோம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தெளிவான வேலைத்திட்டம் முன்வைக்கப்படவில்லை.

எனவே, வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு மீளச் செலுத்துவது என்பதே தற்போதுள்ள முதன்மையான பிரச்சினையாகும்; மாறாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது அல்ல. கடன் விவகாரம் குறித்து தற்போது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பேசப்படுவதில்லை. கடனை மீளச் செலுத்த முடியாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும்.

இந்நூலில் இரு யுத்தங்கள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; உண்மையில் மூன்றாவது யுத்தம் பற்றியே இனி எழுத வேண்டும்” என்று கூறினார்.

 

Related Articles

Latest Articles