வயதான ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று (18) இரவு உயிரிழந்துள்ளதாக தேசிய உயிரியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஒட்டகச்சிவிங்கி உயிரிழக்கும் போது அதற்கு சுமார் 30 வயதாகியிருந்தது.

பொதுவாக, காடுகளில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகளின் ஆயுட்காலம் 20-25 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், சரியான பராமரிப்புடன் கூடிய உயிரியல் பூங்கா சூழலில் அவை நீண்ட காலம் வாழ முடியும். அதன்படி, இந்த ஒட்டகச்சிவிங்கி நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பதற்கு முன்னர் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எவ்வித சிறப்பு நோய் நிலைமைகளும் பதிவாகியிருக்கவில்லை. முதுமை காரணமாகவே இந்த இயற்கை மரணம் சம்பவித்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக பிரேத பரிசோதனைகள் இன்று (19) மேற்கொள்ளப்படவுள்ளன.

உயிரியல் பூங்கா சூழலில் வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாப்பு, தேவைகளுக்கேற்ப ஊட்டச்சத்து மிக்க மற்றும் சீரான உணவு வழங்கல், தூய்மையான மற்றும் பொருத்தமான வாழிட பராமரிப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தேவையான கால்நடை மருத்துவ சிகிச்சை ஆகியவற்றின் காரணமாகவே இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு சுமார் 30 ஆண்டுகள் என்ற நீண்ட ஆயுளை அனுபவிக்க முடிந்தது.

தேசிய உயிரியல் பூங்காக்கள் திணைக்களத்தினால் விலங்கு நலன், மரபணு பன்முகத்தன்மையைப் பேணுதல் மற்றும் விலங்கு பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுக்காகச் செயல்படுத்தப்படும் விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை தேசிய உயிரியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒட்டகச்சிவிங்கிகளைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, எதிர்காலத்தில் புதிய ஒட்டகச்சிவிங்கிகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிட்டும்.

Related Articles

Latest Articles