இஸ்ரேலில் 7,000 இலங்கையர்களுக்கு நாடுகடத்தல் அபாயம்!

இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 7,000 இலங்கைத் தொழிலாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க, தற்போது இஸ்ரேலில் சுமார் 30,000 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார். இவர்களில் சுமார் 7,000 பேர் குறிப்பிட்ட தொழில் பிரிவுகளுக்காக இஸ்ரேலுக்கு சென்ற பின்னர் வேறு வேலைகளில் ஈடுபட்டதாகவும், பின்னர் அகதி அந்தஸ்து கோரிய நிலையில் தற்போது நாடுகடத்தலை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் தங்கள் பிரஜைகளுக்காக தலையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அரசும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் சில தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட விதம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் வழங்கிய பெயர்ப் பட்டியலை இஸ்ரேலின் Population and Immigration Authority-க்கு அனுப்புமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அப்போது பணியகம் வழக்கமான நடைமுறைகளின் கீழ் தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயத் துறைக்காக அனுப்பப்பட்ட சில தொழிலாளர்களுக்கு, அவர்கள் எந்த வேலைப் பிரிவின் கீழ் இஸ்ரேலுக்கு செல்கிறார்கள் என்பது குறித்து முறையாக விளக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“இது தொழிலாளர்களின் தவறு என்று நான் கருதவில்லை” என அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

பின்னர் சிலர் வேறு வேலைகளுக்குச் சென்று அகதி அந்தஸ்துக்கும் விண்ணப்பித்ததாகவும், அவர்களின் சட்டபூர்வ நிலையை சரிசெய்ய இஸ்ரேல் அதிகாரிகள் ஒரு பொதுமன்னிப்பு காலத்தை வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் முந்தைய அரசாங்கம் தேவையான தலையீட்டை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஏற்கனவே இஸ்ரேலில் இருந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக மேலும் சுமார் 6,000 பேரை அனுப்புவதற்கான திட்டம் இருந்ததாகவும், அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முறைகேடுகள் மற்றும் பண வசூல் குறித்தும் பிரதி அமைச்சர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களுக்காக நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்து வருவதாக அருண் ஹேமச்சந்திர உறுதியளித்துள்ளார்.

Related Articles

Latest Articles