பணத்திற்கு பிணை கையெழுத்து : இருவருக்கு 2 ஆண்டு கடூழிய சிறை!

இந்தியப் பிரஜை ஒருவருக்காக பணம் பெற்றுக்கொண்டு பிணையில் கையெழுத்திட்டதுடன், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

கொழும்பு, சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த ஹுசைன் மொஹமட் மற்றும் ஹசித் மொஹமட் ஆகிய இருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், பணம் பெற்றுக்கொண்டு ஒருவருக்கு பிணை வழங்க முன்வந்தமை, போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தமை மற்றும் அந்தக் குற்றங்களுக்கு உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.

பிணை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறி போலியான சத்தியக்கடதாசி ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக நீதிமன்ற பதிவாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் பேசிய இருவரும் தங்களுக்கு நீதி வழங்குமாறு கோரியதுடன், முதலாவது குற்றவாளி தனக்கு சிறு குழந்தை இருப்பதையும் தண்டனை வழங்கும்போது கருத்தில் கொள்ளுமாறு கோரினார்.

ஆனால், பணம் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிணை கையெழுத்திடும் செயல்களைத் தடுக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கையாக இந்தத் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர்கள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்ததை கருத்தில் கொண்டு, அந்த ஆறு மாத காலத்தை சிறைத்தண்டனையிலிருந்து கழிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles