கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரங்கல் செய்தி
இலங்கை இசைத்துறையின் பொன் குரலாகப் போற்றப்பட்டவரும், சுமார் எட்டு தசாப்தங்களாக தனது ஒப்பற்ற குரல் ஆளுமையினால் இந்நாட்டின் இசையையும் கலாச்சாரத்தையும் போஷித்து வளர்த்தவருமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின்: மறைவுச் செய்தியினைக் கேட்டு நான் பெரும் துயரமடைந்தேன்.
நந்தா மாலினி அவர்களின் பாடல்களைக் கேட்டு, அப்பாடல்களுடன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களைக் கடந்து வந்த ஒரு ரசிகையாக, அவரது பிரிவு எனக்கு வெறுமனே இலங்கை இசையின் இணையற்ற கலை ஆளுமையொன்றை நாம் இழந்த துயரத்தினை மாத்திரம் உணர்த்தவில்லை. மாறாக, எமது வாழ்க்கைக்கு நெருக்கமாக, எமது நினைவுகளுடன் பின்னிப்பிணைந்து, இன்பத்திலும் துன்பத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் நம்மை விட்டுப் பிரிந்து சென்றதாகவே நான் உணர்கின்றேன்.
அவரது பாடல்கள் எமது தலைமுறையின் வாழ்க்கை அனுபவங்களோடு ஐக்கியப்பட்டிருந்ததோடு, அந்த அழகிய குரலோடு உருவான நினைவுகள் இன்று அவரது பிரிவினால் மிகக் கனமான நினைவுகளாக நெஞ்சை வருடுகின்றன.
பிள்ளைப்பருவத் திலேயே “புது சாது மம சதுன் கசக் வென்னம்” (புத்த பெருமானே, நான் ஒரு சந்தன மரமாகின்றேன்) என்ற பாடலைப் பாடி இசை உலகில் கால் பதித்த அவர், கலாநிதி டபிள்யூ.டி. அமரதேவ அவர்களின் வழிகாட்டல்களைப் பெற்று “ரன்முத்து தூவ” திரைப்படத்தின் மூலம் திரை இசைத்துறைக்குள் பிரவேசித்தார்.
அன்றிலிருந்து பல தசாப்தங்களாக அவரது குரல் எமது இல்லங்களிலும், பாடசாலைகளிலும், விழாக்களிலும், தேசிய நிகழ்வுகளிலும், அமைதியாக எமது இயல்பு வாழ்க்கையோடு பயணித்துக் கொண்டிருக்கின்றது. அவர் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை எமக்கு வெறுமனே கேட்கக் கிடைத்த பாடல்கள் அல்ல, மாறாக எமது சொந்த வாழ்க்கையின் அங்கங்களாகவே அமைந்திருந்தன.
அவரது இசை வாழ்க்கையானது, இலங்கை இசைக்கலையின் ஒரு யுகம் மாத்திரமன்றி, இந்நாட்டு மக்களின் வாழ்க்கையினதும், சமூக மாற்றங்களினதும், மனித உணர்வுகளினதும் உயிர்ப்பு மிக்கதொரு வெளிப்பாடாகவும் இருந்து வந்திருக்கின்றது.
காதல், சோகம் போன்ற மனித உணர்வுகளைப் பாடுவதற்கு அப்பால் சென்ற அவர், பொதுமக்களின் துயரம், பீதி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை மற்றும் போராட்டம் ஆகியவற்றையும் தனது பாடல்கள் மூலமாக மக்களின் குரலாக மாற்றினார். அதனாலேயே அவரது பாடல்கள், ஒரு பாடகியின் குரலாக மாத்திரமல்லாது, எமது சொந்தச் சமூகத்தின் குரலாகவும் எம்மை உணர வைத்தன.
ஒருபோதும் சமூகத்திலிருந்து ஒதுங்கிய ஒரு கலைஞராக இருக்காத அவர், அநீதிக்கு முன்னால் அமைதியாக இராமலும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காகவும், மனிதநேயம் மற்றும் சமூக நீதிக்காகவும் அஞ்சாமல் குரல் கொடுத்து வந்தார்.
“பவன” மற்றும் “சத்யயே கீதய” (உண்மையின் கீதம்) போன்ற படைப்பாக்கத் தலையீடுகளினூடாக ஒரு கலைஞரின் குரலும் சமூகத்தின் துயரத்தைத் துடைக்கும் குரலாக மாற முடியும் என்பதையும், பாடலால் மனிதகுலத்தின் உணர்திறனை விழிப்படையச் செய்து ஒரு நல்ல சமூகத்தைப் பற்றிய நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் அவர் நமக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றார்.
நந்தா மாலினி அவர்களின் பாடல்களுடன் சம்பந்தப்பட்ட எனது தனிப்பட்ட பல நினைவுகளும் இருக்கின்றன. சில பாடல்களை மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கின்றேன். இன்னும் சில பாடல்கள் எனது துயரத்துடனும் அமைதியோடும் சங்கமமாகியிருக்கின்றன. இன்னும் சில பாடல்கள் நாம் வாழ்ந்த காலம், நாம் முகங்கொடுத்த சமூக அனுபவங்கள் மற்றும் நமக்குள்ளிருந்த நம்பிக்கைகளை நினைவூட்டுகின்றன. எனவே, அவரது குரல் நமக்கு வெறுமனே ஒரு பாடலாக மாத்திரம் இருக்கவில்லை. அது எமது வாழ்க்கையோடு பயணித்த, எமது உணர்வுகளை இனம் கண்ட, சிலவேளைகளில் நமக்காகவே பேசிய ஒரு குரலாகவும் இருந்து வந்திருக்கின்றது.
சாஸ்திரிய இசையின் ஆழமான தேர்ச்சியும், இணையற்ற குரல் ஆளுமையும், உணர்வுகளை வெளிப்படுத்தும் விசேட ஆற்றலும் கொண்டிருந்த நந்தா மாலினி அவர்கள் இலங்கை இசைத்துறைக்கு வழங்கிய பங்களிப்பு அபாரமானதாகும். இருப்பினும் அவர் பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்கள் அனைத்தையும் விட, பல தலைமுறை மக்களின் இதயங்களில் அவர் வென்றெடுத்த அன்பே அவரது கலைப் பணியின் உண்மையான பெறுமதியை அடையாளப்படுத்துகின்றது. எனது தலைமுறைக்கும், எனக்கும் அவரது குரல் அந்தளவிற்கு நெருக்கமானதாக இருந்ததற்குக் காரணமும் அதுவேயாகும்.
இன்று அவரது பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இத்தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு ஏற்பட்ட இணையற்ற கலைஞரின் இழப்பைப் பற்றிய நினைவாக மாத்திரமின்றி, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பிணைந்திருக்கும் பாசமும் நேசமும் மிக்க குரலைப் பற்றியும் நான் நினைவுகூர்கின்றேன்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் அவரது 82 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி, அவரது இனிய குரலை நேரலையாக அவர் அருகில் இருந்து ரசித்ததோடு, எமது அன்பையும் கௌரவத்தையும் செலுத்துவதற்குப் பெற்ற அந்தச் சந்தர்ப்பத்தை இக்கணத்தில் நான் மிகுந்த கௌரவத்துடனும் துயரத்துடனும் நினைவுகூர்கின்றேன்.
பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனமாகிவிட்ட போதிலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்.
அவர் விட்டுச் சென்ற பாடல்களின் தொகுப்பும், உருவாக்கிய கலைப் பாரம்பரியமும், சமூகத்திற்காக ஒரு கலைஞரால் ஆற்றப்பட வேண்டிய பொறுப்பு பற்றிய முன்மாதிரியும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் வழிகாட்டும். அவரது குரல் இனிவரும் காலங்களிலும் ஒலிக்கப் போவது ஒரு பாடலாக மாத்திரமல்ல, நீதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் இந்தத் தேசத்தின் மீதான அன்பிற்காக ஓங்கி ஒலிக்கும் வீரம் மிக்க குரலாகவே ஆகும்.
எமது வாழ்க்கையின் பல நினைவுகளுக்குக் குரலாக அமைந்த, பல தலைமுறைகள் அன்போடு தழுவிக்கொண்ட, இலங்கை இசைத்துறையின் ஒரு அழியாத அத்தியாயத்தினை உருவாக்கிய கலாநிதி நந்தா மாலினி அவர்களுக்கு எனது கௌரவத்தையும் அன்பையும் சமர்ப்பிக்கின்றேன். அவருக்கு அவர் பிரார்த்தித்த அமைதி கிடைக்க வேண்டும் எனவும், அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன்.
அவரது இரு புதல்விகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரது இசைக்குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.










