எல்-நினோ தாக்கத்தால் பெருந்தோட்டத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் ஆராய்வு

எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ நிலைமையினால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவைகள், ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

கடந்த சிறு போகத்தில் முழுமையான தயார்நிலையுடன் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பயிர்ச் சேதங்கள் குறைவாக உள்ளதாக கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின் படி, எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் முழு நாட்டிற்கும் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும் என கூறப்பட்டுள்ளதுடன், அந்தத் தாக்கத்தினால் விவசாயம், பெருந்தோட்டத்துறை, நன்னீர் மீன்பிடித்துறை, நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தார்.

பாதிக்கப்படக்கூடிய காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதும், அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் மக்களின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைச் செயற்படுத்துவதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போது பிரதான நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீரின் அளவு, தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குதல், அத்துடன் எதிர்காலப் பயிர்ச்செய்கைத் திட்டங்கள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

பிரதான நீர்த்தேக்கங்கள், சிறிய நீர்ப்பாசனங்கள் மற்றும் சிறிய குளங்கள் மூலம் நீரைப் பெறும் நுகர்வோர் சதவீதம் தொடர்பான தெளிவான தரவுக் கட்டமைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும், வறட்சியான காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே இனங்காண்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீர்வெட்டை மேற்கொள்ள நேரிட்டால், நீர்த்தேக்கங்கள் முற்றிலுமாக வற்றும் வரை காத்திருக்காமல், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், குளங்கள், ஆறுகள் மற்றும் ஓடைகள் முழுமையாக வற்றிப்போகும் பகுதிகளை அடையாளம் காண வேண்டும் என்றும், அத்தகைய இடங்களில் வாழும் மக்களுக்கு குடிநீருக்கு மட்டுமன்றி, ஏனைய நாளாந்தத் தேவைகளுக்கும் நீரை விநியோகிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவை தொடர்பான நிலைமைகளின் வரைபடம் ஊடான தயார்படுத்தலின் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

பயன்படுத்த முடியாத வகையில் உள்ள நீர் மூலங்களைச் சுத்திகரித்துக் கொள்வதற்குப் பிரதேச செயலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கும் முதல் மழையுடன், நீர்தேக்கங்களிலிருந்து நீர் திறக்கப்படும் வரை காத்திருக்காமல், மழை நீரைப் பயன்படுத்தி நிலத்தைப் பண்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டதுடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவை இணைந்து ஒரு கூட்டுத் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்வரும் பெரும்போகத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரம் வழங்குவது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.

எல்-நினோ தாக்கத்தின் காரணமாக நன்னீர் மீன்பிடித்துறைக்கும் மீன் உற்பத்திக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கான தயார் நிலை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்படும் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரங்கள் வழமைக்குத் திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்காகத் திட்டங்களை வகுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பெருந்தோட்டத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கு முகங்கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும், வன ஜீவராசிகள் பகுதிகளிலுள்ள விலங்குகளின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல், ஆரம்பமாகும் மழை காலத்தின் போது அதிகபட்ச நீர் கொள்ளளவைச் சேமித்துக்கொள்வதற்காக நீர்ப்பாசனக் கட்டமைப்பை உடனடியாகப் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த வருடம் தடையின்றி மின்சாரத்தை வழங்குவது மற்றும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி-ஏப்ரல் காலப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் வறண்டு போவதால் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்காக, சாதாரண தேவையை விட அதிகமான மேலதிக மின்சாரக் கொள்ளளவை திட்டமிட்டு பேணுவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுனில் ரணசிங்க, வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி,வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கே. வெலிகெபொலகே, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட உட்பட குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles