இலங்கையில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் வெப்பநிலை, நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக பதிவான 40.1°C வெப்பநிலையை நெருங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 1983 ஏப்ரலில் வவுனியாவில் பதிவான 40.1°C ஆகும். ஆனால் அண்மையில் பொத்துவிலில் 39.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது அந்த சாதனையைவிட வெறும் 0.2°C மட்டுமே குறைவாகும். அதேபோன்று பொலன்னறுவையிலும் வெப்பநிலை 37°C-ஐ தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் வெப்பநிலை 40°C-ஐ தாண்டி, 1983ஆம் ஆண்டு பதிவான சாதனையையும் முறியடிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மழைவீழ்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழமையை விட குறைந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். தென்மேற்கு பகுதிகளில் சாதாரண அளவிலான மழை கிடைக்கக்கூடும் என்றாலும், ஏனைய பல பகுதிகளில் மழை குறைவாக இருக்கலாம்.
எனினும், ஒக்டோபர் மாதத்திலிருந்து நிலைமை மாறக்கூடும் என்றும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இலங்கை வறட்சியை எதிர்கொள்ளுமா அல்லது வெள்ளப்பெருக்கு நிலை ஏற்படுமா என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மாறிவரும் காலநிலை காரணமாக சில காலங்களில் வறட்சியும், வேறு சில காலங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், El Niño நிலைமைகளை இலங்கை தனிப்பட்ட முறையில் கணிக்கவோ கண்காணிக்கவோ செய்வதில்லை என்றும், சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் El Niño முன்னறிவிப்புகளுடன் இலங்கையின் கடந்தகால காலநிலைத் தரவுகளை இணைத்தே நாட்டுக்கான தாக்கங்கள் மதிப்பிடப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
