முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவா (Marketa Vondrousova), ஊக்கமருந்து பரிசோதனையைத் தவறவிட்டதற்காகத் தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுப் பெறப்பட்டதை உறுதிசெய்துள்ள CAS அமைப்பு, இதற்கான விசாரணைத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடையின்படி செக் குடியரசைச் சேர்ந்த 27 வயதான வோண்ட்ரௌசோவா, வரும் 2030 ஜூன் 21 ஆம் திகதி வரை விளையாட முடியாது.
கடந்த டிசம்பர் மாதம் அவரது வீட்டில் வைத்து மேற்கொள்ளப்பட்ட போட்டியற்ற சூழலிலான (out-of-competition) ஊக்கமருந்து பரிசோதனையின்போது, அதிகாரி கேட்டுக் கொண்டபடி அவர் தனது மாதிரியை (sample) சமர்ப்பிக்கத் தவறியதாக சர்வதேச டென்னிஸ் ஒருங்கிணைப்பு முகமையால் (ITIA) கடந்த ஜூன் மாதம் அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டது.
இது குறித்துக் கருத்து தெரிவித்திருந்த வோண்ட்ரௌசோவா,
உடல் மற்றும் மன ரீதியான கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், இரவு 8:15 மணிக்கு வீட்டிற்கு வந்த அதிகாரி ஒருவர் உடனடியாக மாதிரி கேட்டது தனது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போல இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தான் ஒருபோதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை என்றும், இச்சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தனக்கு ‘நெகட்டிவ்’ (Negative) என்றே முடிவு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் போட்டிகளில் பங்கேற்காத முன்னாள் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த வோண்ட்ரௌசோவா, தற்போது 153-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இவர் 2023-இல் விம்பிள்டன் பட்டத்தையும், 2019 பிரெஞ்சு ஓபன் தொடரில் இறுதிப்போட்டி வரையும், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.










