பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்:மக்கள் அச்சம்

பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் நேற்று காலை ஐந்து காட்டு யானைகள் பிரவேசித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

குறித்த காட்டு யானைகள் ஐந்தும் தோட்டப் பகுதிக்குள் நடமாடியதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், காட்டு யானைகளின் இந்த நடமாட்டத்தினால் இதுவரை உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

குறிப்பாக, இரவு நேரங்களில் காட்டு யானைகள் தோட்டப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதால், தோட்ட மக்கள் அச்சத்துடனேயே இரவு நேரங்களை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், பகல் நேரங்களிலும் இரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்பில் அச்சத்துடனேயே தமது பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் தொடர்ச்சியாக தோட்டப் பகுதிகளுக்கு வருகை தரும் பட்சத்தில், எதிர்காலத்தில் மனித–யானை மோதல் ஏற்பட்டு உயிர் மற்றும் உடைமைச் சேதங்கள் ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

த.டிமேஷன்

Related Articles

Latest Articles