2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவுக்கான இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 7.22% அதிகரித்து 669.36 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான இதே காலப்பகுதியில் இந்தியாவுக்கான ஏற்றுமதி 624.31 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 2026 ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான ஏற்றுமதி 129.51 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2025 ஜூலை மாதத்தில் பதிவான 118.69 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 9.12 சதவீத அதிகரிப்பாகும்.
Boilers, piston engines, pumps, vacuum pumps உள்ளிட்ட இயந்திர உபகரணங்கள், பெற்றோலிய எண்ணெய் சார்ந்த பொருட்கள், கால்நடை உணவு மற்றும் அடிப்படை உலோகப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததே இந்தியாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான ஏற்றுமதி மட்டுமன்றி, தெற்காசிய நாடுகளுக்கான இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. 2026 ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் தெற்காசிய சந்தைகளுக்கான ஏற்றுமதி 11.98 சதவீதம் அதிகரித்து 916.55 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
