“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்காமல் இலங்கை மேலும் குற்றமிழைக்கிறது”

இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனா லொரெனா டெல்காடியோ (Ana Lorena Delgadillo) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கையில் பல தசாபதங்களாக ஆயிரக்கணக்கானோர் காணாமலும், வலிந்து காணாமலும் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான பதிலும், நீதியும் விரைவாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமையும், தண்டனையின்மை கலாசாராமும் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகள் எவ்விதமான அரச தலையீடுகளும் இல்லாமல் சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி டெல்காடியோ இலங்கை அரசிடம் கோரியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்படுவது பல நாடுகளில், அரசுகளாலும் முன்னெடுக்கபடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் எனவும், அந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளது என்பதையும் அவர் யாழ்ப்பாணத்தில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை தேடியலையும் தாய்மார்களிடையே உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பிள்ளைகளை தேடும் தாய்மார்களின் ஆழ்ந்த வேதனையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

“எந்த தாயும் காணாமல் போன தமது பிள்ளைக்கு என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ளமால் மரணிக்க கூடாது”

தண்டனையின்மை கலாசாரம் மோசமான செயற்பாடு என்பதை குறிப்புணர்த்திய அவர், தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை அப்படியான சட்ட விரோதமான செயற்பாடுகள் மேலும் இடம்பெறுவதை அனுமதிப்பதாகவே பார்க்கப்படும் எனவும் இலங்கை அரசை கடுமையாக சாடியுள்ளார்.

“தண்டனையின்மை கலாசாரம் மிக அதிகளவில் உள்ளது மிகுந்த கவலையளிக்கும் விடயமாக உள்ளது. அது அப்படியான தண்டனையின்மை நடவடிக்கை ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்படும் போது, வலிந்து காணாமல் ஆக்கப்படுவது அனுமதிக்கப்படுகிறது என்ற செய்தி சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, அப்படியான செய்தி தெரிவிக்கப்படும் போது, வலிந்து காணாமல் ஆக்கப்படுவது அனுமதிக்கப்பட்ட ஒரு செயலே என்ற எண்ணப்பாடு பரவுகிறது. அதனால் தான், தண்டனையின்மை என்பது எமக்கு மிகுந்த கவலையளிக்கும் ஒரு விடயமாக உள்ளது”

காணாமல் போனவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம், அந்த தகவலை அளிக்க வேண்டியது அரசின் கடப்பாடு எனவும் அவர் வலியுறித்தினார்.

”காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னவாயிற்று மற்றும் அவர்கள் எங்கேயுள்ளனர் என்பது அறியப்படாத வரையிலும், அதேவேளை அவர்களின் உறவினர்கள் பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அது கிடைக்காத பட்சத்தில் குற்றம் தொடருவதாக கருதப்படும். அதே போன்று தான் இலங்கை அரசு மற்றும் சர்வதேச சமூகத்தின் கடப்பாடும்” ஐ.நாவின் ஒரு அங்கமான வலிந்து காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சிறப்பு செயற் குழு உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

எனினும், தமது உரையில், தென் இலங்கையில் 80-களின் பிற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணி அனா லொரெனா டெல்காடியோ, தமது இலங்கை விஜயத்தின் போது, அண்மைக் காலங்களில் கண்டறியப்பட்டு அகழப்படும் மனித புதைகுழிகள் சிலவற்றையும் பார்வையிடுவார் என்றும், வடக்கு-கிழக்கு மாவட்டங்களுக்கு பயணித்து காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தும் உரையாடுவார் என்று அறியப்படுகிறது.

இந்த பயணத்தின் போது, வடக்கு-கிழக்கில் போர்க்காலத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள், சட்டவிரோத செயல்பாடுகள் ஆகியவை காரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக தவல்கள், தரவுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றையும் அவர் சேகரிப்பார் எனவும் கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles