வணிக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு முற்றாகத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐஸ்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், உலக அளவில் வணிக ரீதியாகத் திமிங்கலங்களை வேட்டையாடும் நாடுகளாக நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.
ஐஸ்லாந்தில் நடைபெற்று வரும் திமிங்கல வேட்டைக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்களும் ஹொலிவுட் பிரபலங்களும் பல ஆண்டுகளாகத் தொடர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், “திமிங்கல வேட்டை மீதான நிரந்தரத் தடையை” இந்தச் சட்டமூலம் உள்ளடக்கும் என அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐஸ்லாந்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் இறுதி வரை தொடரும் நடப்பு வேட்டை பருவத்தில், செப்டம்பர் 9ஆம் திகதி நிலவரப்படி 80 ‘ஃபின்’ (Fin) வகை திமிங்கலங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கு நல அமைப்பான ‘ஹுமேன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ்’ தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டு 150 திமிங்கலங்களை வேட்டையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
“திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கும் இந்தச் சட்டமூலத்திற்கு அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு உள்ளது. நெறிமுறை, கால்நடை பராமரிப்பு, சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இச்சட்டம் வெற்றிபெறும் என நம்புகிறோம்” என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெண்டி ஹிகின்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச திமிங்கல வேட்டை ஆணைக்குழுவின் (IWC) தரவுகளின்படி, சமீபத்திய ஆண்டுகளில் ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே வணிக ரீதியிலான திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வந்தன. திமிங்கலங்களைப் பாதுகாப்பதற்காக 1986ஆம் ஆண்டு சர்வதேச அளவில் விதிக்கப்பட்ட தடையையும் மீறி, நோர்வே 1993இலும் ஐஸ்லாந்து 2006இலும் மீண்டும் வேட்டையாடத் தொடங்கின. ஜப்பான் 2019இல் சர்வதேச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறி தனது பிராந்தியக் கடல் எல்லைக்குள் வேட்டையாடி வருகின்றது.
அதேவேளை, கிரீன்லாந்து மற்றும் அலாஸ்கா போன்ற பகுதிகளில் வாழும் பூர்வகுடி மக்களின் உணவு மற்றும் கலாச்சாரத் தேவைகளுக்காகத் திமிங்கலங்களை வேட்டையாட சர்வதேச விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










