சிறைச்சாலையில் இருந்து அனுப்பிய செய்தியில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நஜித் இந்திக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவ்விருவரின் சிறைவாசச் சூழலையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச , கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அநுராதபுரம் கூட்டத்துக்கு அனுப்பிய செய்தியில் மண்டேலாவின் பொன்மொழிகளைக் குறிப்பிட்டிருந்தார்.
“துன்பங்கள் சில மனிதர்களை உடைத்துவிடும், ஆனால் சிலரை மேலும் வலுவாக்கும்” என்ற மண்டேலாவின் கூற்றை அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது.
இந்தச் செய்திக்குப் பதிலளித்த இந்திக, இந்த ஒப்பீட்டை கேள்விக்குட்படுத்தியதோடு, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சி முறைக்கு எதிரான போராட்டத்திற்காக மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“யார் நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுகிறார்? நாமல் ராஜபக்சவா??” என்று கேள்வி எழுப்பிய இந்திக, ஒடுக்கப்பட்ட மற்றும் இனவெறி அமைப்புக்கு எதிரான எதிர்ப்பிற்காக மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டதையும், பின்னர் தென்னாப்பிரிக்காவின் அதிபராகி நிறவெறி ஆட்சியிலிருந்து நாட்டின் மாற்றத்திற்கு தலைமை தாங்கியதையும் விளக்கினார்.
அதேவேளையில், நாமல் ராஜபக்சஷ தற்போது எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளையும் அவற்றுடன் ஒப்பீட்டுச் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாமலின் தந்தையும் சித்தப்பாவும் அதிபர் பதவிகளை வகித்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிப் பதிவுகளை விமர்சித்த இந்திக, தற்போதைய சூழலில் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த தென்னாப்பிரிக்க தலைவருக்குச் செய்யும் அநீதியாகும் என்றும் வாதிட்டார்.
