ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்திய கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பங்கேற்ற விவகாரம் தொடர்பில் அரசியல் களத்திலும், சமூகவலைத்தளங்களிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் ஹிரு தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான சலகுன அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம், அர்ச்சுனாவின் பங்கேற்பு குறித்து கேள்வி எழுப்பட்டது.
“அர்ச்சுனா இராமநாதன் உங்கள் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்ட அவருக்கு, மஹிந்த ராஜபக்சவுக்கு அருகிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
போரிலிருந்து இந்நாட்டைக் காப்பாற்றியவர் மஹிந்த ராஜபக்சஷ. ஆனால், பிரபாகரனைக் கடவுளாக வழிபட்டவர்தான் அர்ச்சுனா எம்.பி. ஆக, ஒரே மேடையில் முரண்பாடான இருவர் உள்ளார்களே?” என்று ஊடகவியலாளர் சமுதித்த கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம்:
“இதுதான் அங்குள்ள விசேட அம்சமாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணா அம்மான், ஜனநாயக வழிக்குத் திரும்பி மஹிந்தவுக்கு அருகில் வந்து அமர்ந்து, பிரிவினைவாதச் சிந்தனையிலிருந்து விடுபட்டார்.
அதேபோல் பிள்ளையானும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்தான். அவரும் ஜனநாயகப் பாதைக்கு வந்து, பிரிவினைவாதச் சிந்தனையிலிருந்து விடுபட்டார். அர்ச்சுனாவும் அதேபோன்றதொரு சிந்தனையில் இருந்தவர்தான். ஆனால் எதிர்காலத்தில் அவரும்…” என்று கூறிக்கொண்டிருக்கையிலேயே, அவர் அந்தப் பதிலை முழுமைப்படுத்துவதற்குள் மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.
(எதிர்காலத்தில் அவரும் என்ற வார்த்தையின் மூலம், கருணா மற்றும் பிள்ளையானைப் போன்று அர்ச்சுனாவும் பிரிவினைவாதச் சிந்தனையிலிருந்து விடுபடுவார் என்பதையே சாகர காரியவசம் குறிப்பிட முற்பட்டார் என்பதை ஊகிக்க முடிகிறது.)
அர்ச்சுனாவுக்கு அழைப்பு விடுத்தது யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த சாகர காரியவசம், “நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மூலமாகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்று தேசிய சமத்துவம் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்குமாறு அர்ச்சுனா தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எமது கொள்கைக்கு முரணான எந்தவொரு கருத்துரையும் கூட்டத்தில் அர்ச்சுனாவால் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்தார்.
