16 போலி யூரோ (Euro) நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபரொருவர் ஹட்டன் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் – வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேக நபர், போலி நாணயத்தாள்களைப் பணமாக மாற்றுவதற்காக ஹட்டன் நகரத்திற்கு வருகை தந்துள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரிலேயே பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனரே இந்த வெளிநாட்டு நாணயத்தாள்களைத் தன்னிடம் கொடுத்ததாகவும், அவை போலி நாணயத்தாள்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச் சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 200 யூரோ மதிப்பிலான 9 போலி நாணயத்தாள்களும், 100 யூரோ மதிப்பிலான 7 போலி நாணயத்தாள்களும் அடங்கலாக மொத்தம் 16 போலி வெளிநாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு விவரங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்படும் என ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
நானுஓயா நிருபர்










