நுவரெலியா நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் மட்டக்குதிரைகள் போதிய பராமரிப்பின்றி மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடப்படுவதால், சாரதிகளும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உணவுத் தேவைகளுக்காக நகரை நோக்கி வரும் இம்மட்டக்குதிரைகள் வீதியோரப் புற்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் உட்கொள்கின்றன. பின்னர் பிரதான வீதிகளிலேயே படுத்துத் தூங்குவதுடன், கூட்டமாக வீதியைக் கடப்பதால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
மட்டக்குதிரை உரிமையாளர்கள் தங்களது சொந்த இடங்களிலேயே உரிய முறையில் தொழுவம் அமைத்துப் பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வீதிகளில் திரியும் மட்டக்குதிரைகள் பிடிக்கப்பட்டுப் பொது ஏலத்தில் விடப்படும் என மாநகரசபையினால் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது வரை இதனைக் கட்டுப்படுத்த முடியாத சூழலே நிலவுகின்றது.
இதன் விளைவாக, பிரதான வீதிகளில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது. மேலும், வீதிகளில் செல்லும் வாகனங்களையும் நடந்து செல்லும் பாதசாரிகளையும் மட்டக்குதிரைகள் துரத்திச் சென்று தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.
அண்மைக்காலத்தில் நுவரெலியா பிரதான வீதிகளில் நிலவும் மட்டக்குதிரைகளின் தொல்லையால் விபத்துகள் அதிகரித்துள்ளன. தற்போது மழைக்காலம் தொடங்கினமையால், வீதிகளில் மட்டக்குதிரைகளின் சாணம் மற்றும் சிறுநீரினால் வழுக்குத்தன்மை ஏற்பட்டு வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், குறுகிய வீதிகளில் மட்டக்குதிரைகள் தங்களுக்குள் சண்டையிட்டுச் செல்பவர்கள் மீது மோதுவதாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகின்றது.
உரிமையாளர்கள் மட்டக்குதிரைகள் மூலம் சவாரி சேவைகளை வழங்கிப் பணம் சம்பாதிப்பதில் மாத்திரமே கவனம் செலுத்துவதாகவும், சவாரி இல்லாத நேரங்களில் அவற்றைச் சரியாகப் பராமரிக்காமல் அவிழ்த்து விடுவதாகவும் பொதுமக்கள் சாடுகின்றனர்.
எனவே, நகரில் திரியும் மட்டக்குதிரைகளைப் பிடித்து மாநகரசபைக்குச் சொந்தமான இடத்தில் பராமரித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநகரசபை முதல்வரின் வேண்டுகோள்
இவ்விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நுவரெலியா மாநகரசபை முதல்வர் உபாலி வணிகசேகர:
“மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் அவற்றைச் சொந்தத் தொழுவங்களிலேயே கட்டிப் பராமரிக்க வேண்டும். பிரதான நகரிலோ அல்லது பிரதான வீதிகளிலோ அவை சுற்றித்திரியாத வண்ணம் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.










