சிறுவர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுவர் பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பை வலுப்படுத்தவும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1, 2026 வரையிலான காலப்பகுதியை ‘தேசிய சிறுவர் தின வாரம் – 2026’ ஆக அறிவிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறுவர்களின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் ஆண்டுதோறும் அக்டோபர் 1 ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பாரம்பரியச் சிறுவர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளைத் தாண்டி, இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள், உளவியல் மற்றும் சமூக அழுத்தங்கள், புறக்கணிப்பு மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார சவால்களுக்குச் சிறுவர்கள் பெருகளவில் முகங்கொடுத்து வருவதாக அரசாங்கம் அவதானித்துள்ளது.
மேலும், சிறுவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, தேசிய சிறுவர் தினக் கொண்டாட்டத் திட்டத்துடன் இணைந்து இந்த ‘தேசிய சிறுவர் தின வாரமும்’ முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுவர்கள் மீதான சமூக உணர்திறனை வலுப்படுத்தவும், சிறுவர் பாதுகாப்பில் சமூகத்தின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் சிறப்புத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரையிலான காலப்பகுதியை ‘தேசிய சிறுவர் தின வாரம் – 2026’ ஆக அறிவிப்பதற்கான முன்மொழிவை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.










