மலையக மாணவர் சமூகத்தின் கல்வி மேம்பாடு மற்றும் மலையக பாடசாலைகளின் வள அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டும் முகமாக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் ‘ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் போட்டியை’ நடத்தி வருகிறது.
அந்த வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி மேற்படி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு மன்றம் திட்டமிட்டுள்ளதாக மன்றத்தின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஜி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வருகின்ற இளைஞர்களின் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும் அவர்களை சர்வதேச மைதானம் ஒன்றில் களமிறங்க செய்வதற்கும் என்ற அடிப்படையில் இந்த போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 20 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தலைநகரில் அமைந்துள்ள பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் இடம் பெற இருப்பதாக தெரிவித்துள்ள விளையாட்டுத் துறை பொறுப்பாளர் சந்திரகுமார், இச்சுற்றுப் போட்டியானது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மன்றத்தின் அங்கத்துவம் பெற்றவர்களை மாத்திரமே உள்ளடக்கியவாறு அணிக்கு 11 பேர் கொண்ட மொத்தமாக 40 அணிகள் பங்குபற்றி களம் காணவுள்ளன.
போட்டியின் ஊடாக கிடைக்கப்பெறும் நிதியானது நேரடியாக மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சென்றடையும் என்பதை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் உத்தரவாதம் அளிக்கிறது.










