மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எவ்வித சவாலும் இருக்காது என்றும், கடந்த பொதுத்தேர்தலைவிடவும் அதிக வாக்குகள் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தி முடிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நடைபெறவுள்ள இத்தேர்தல் அரசாங்கத்திற்கு எவ்வித சவாலாகவும் அமையாது.
ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத்தேர்தலில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. எனவே, நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், பொதுத்தேர்தலைவிடவும் அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதி.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின் போது எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட, தற்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். ஏனெனில், இந்த அரசாங்கம் சிறப்பானது என்பதைத் தனது செயற்பாடுகள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.










