சீனாவின் ஹெபே மாகாணத்தில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்ட 70 வயதுடைய மூதாட்டி ஒருவர், ஒரு நாளுக்குப் பிறகு உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளாகப் மூளைக் குருதி உறைவு (Cerebral thrombosis) மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டியின் நிலைமை மோசமடைந்ததையடுத்து, குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தனர்.
கடந்த செப்டம்பர் 8 அன்று, அவரிடம் எந்தவொரு உயிர் அடையாளங்களும் தென்படாததால் அவர் இறந்துவிட்டதாகக் கருதிய குடும்பத்தினர், தொலைதூர உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்தனர்.
எனினும், அடுத்த நாள் மாலையில் சவப்பெட்டிக்குள் இருந்து லேசான முனகல் சத்தம் கேட்பதை மூதாட்டியின் மருமகள் கவனித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது மூதாட்டி மூச்சு விட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அவர் கண்திறந்து பார்த்தபோதிலும், உணவருந்த முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமாகவே இருந்தார்.
ஒருவரது இதயத்துடிப்பும் மூச்சுக்காற்றும் மிகக் குறைவாக இயங்கி, மயக்க நிலைக்குச் செல்லும்போது ஏற்படும் ‘போலி மரணம்’ (Apparent death) என்ற மருத்துவ நிலையால் இது நிகழ்ந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தற்காலிக உயிர்மீட்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. செப்டம்பர் 11 அன்று அந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில், செப்டம்பர் 13 அன்று அவரது இறுதிச்சடங்குகள் நடைப்பெற்றன. இச்சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர் இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, சரியான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே மரணத்தை உறுதிசெய்ய வேண்டும் என்ற விவாதம் சீன சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
